தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஆகாஷ் திவாரி என்ற முப்பத்தைந்து வயது இந்திய வாலிபர் பயணம் செய்துள்ளார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அங்கு பணியாற்றிய விமானப் பணிப்பெண் பயணிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வாலிபர் பணிப்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துத் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் உடனடியாக அவரை எச்சரித்ததுடன் இது குறித்து விமான அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
விமானம் சிங்கப்பூரில் தரை இறங்கியதும் அங்கு தயாராக இருந்த விமான நிலையப் போலீசார் அந்த வாலிபரை அதிரடியாகக் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
தன் மீதான குற்றச்சாட்டை அந்த வாலிபர் மறுத்துள்ள போதிலும் சிங்கப்பூர் சட்டப்படி பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட குற்றத்திற்காக அவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம். மேலும் கடுமையான பிரம்படி தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வருகிற இருபத்தியாறாம் தேதி நடைபெற உள்ளது. ஒரு இந்திய வாலிபர் விமானப் பணிப்பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
