டெல்லி அசோக் நகர் பகுதியில் விளையாட்டாக துப்பாக்கியை கையாண்ட 28 வயது இளைஞர் ஒருவர், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தல்லுபுரா கிராமத்தைச் சேர்ந்த பவன்குமார் என்ற அந்த இளைஞர், தனது உறவினர் ஹிமான்ஷு என்பவரின் லைசென்ஸ் பெற்ற துப்பாக்கியை கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது பவன்குமார் துப்பாக்கியில் குண்டுகளை நிரப்புவதை ஹிமான்ஷு தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து கொண்டிருந்தார்.

வீடியோவில் பவன்குமார் கேமராவைப் பார்த்து சிரித்தபடி, விளையாட்டாக துப்பாக்கியை தனது மார்பில் வைத்தபோது, “சுட வேண்டாம்” என்று பின்னணியில் ஒரு குரல் எச்சரித்துள்ளது.

ஆனால் அந்த எச்சரிக்கையை மீறி துப்பாக்கி வெடித்ததில், தோட்டா பவன்குமாரின் மார்பில் பாய்ந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த அதிர்ச்சி வீடியோவையும், துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ள போலீசார், இது தற்கொலையா? அல்லது கவனக்குறைவால் நடந்த விபத்தா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.