தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் நடிகர் ரஜினிகாந்தின் கடின உழைப்பையும் அவரது கலைப்பயணத்தையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். இந்தியத் திரையுலகில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக யாராலும் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் ரஜினிகாந்த் இருப்பதற்குக் காரணம் அவரது விடாமுயற்சியும் கலைத்திறனுமே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது திரைப்படங்களில் சக கலைஞர்களுக்கு உரிய வாய்ப்புகளை வழங்கி அவர்களை ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர் ரஜினிகாந்த் என்றும் இத்தகைய தனித்துவமான குணங்களே அவரை என்றும் சூப்பர் ஸ்டாராக நிலைநிறுத்தியுள்ளன என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும் ரஜினிகாந்தின் மனவலிமை குறித்துக் விமர்சிப்பவர்களை அண்ணாமலை கடுமையாகச் சாடியுள்ளார். தனக்கெனத் தனி அடையாளம் இல்லாதவர்கள் மற்றும் மற்றவர்களின் பொருளாதாரப் பின்னணியை வைத்துக் கொண்டு அரசியல் அடையாளத்தைத் தேடிக்கொள்பவர்கள் ரஜினிகாந்தைப் பற்றிப் பேசுவது மாயையே என்று அவர் விமர்சித்துள்ளார்.
பல கட்சிகள் மாறி அரசியல் அடையாளம் தேடுபவர்கள் ரஜினிகாந்தின் புகழைக் குறித்துப் பேசுவது வேடிக்கையானது என்றும் அண்ணாமலை தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். ரஜினிகாந்திற்கு ஆதரவாகவும் அவரது விமர்சகர்களுக்கு எதிராகவும் அண்ணாமலை தெரிவித்துள்ள இந்தக் கருத்துக்கள் தற்பொழுது அரசியல் மற்றும் திரைத்துறையினரிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
