நடிகர் ரஜினிகாந்த் குறித்து தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துப் பேசியது, தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக கொடுத்த பயத்தால் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என அவர் கூறியதற்கு, ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, பாஜகவுடன் விஜய் கூட்டணி அமைக்கப்போவதாகப் பேசப்பட்டு வந்த நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் ஜி.கே.வாசன் போன்ற தலைவர்களின் இந்த எதிர்ப்பு, தவெக – பாஜக கூட்டணி அமைய வாய்ப்பில்லை என்பதையே உறுதிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்தக் கண்டனங்களால் தவெக நிர்வாகிகள் சிலர் நிம்மதியடைந்தாலும், தேர்தல் வெற்றியைப் பற்றிய கவலையும் ஒரு தரப்பினரிடம் எழுந்துள்ளது. ஏற்கனவே நடிகர் விஜய்யின் குடும்ப விவகாரங்கள் குறித்த விமர்சனங்களைச் சமூக வலைதளங்களில் சமாளிக்க முடியாமல் திணறி வரும் அக்கட்சியின் தொண்டர்களுக்கு, தற்போதைய ரஜினி விவகாரம் கூடுதல் சுமையாக மாறியுள்ளது.

கொள்கை ரீதியாக பாஜகவுடன் இணையக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் நிர்வாகிகளுக்கு இந்த மோதல் நிம்மதியைத் தந்தாலும், வலுவான கூட்டணி இல்லாமல் தேர்தலை எப்படிச் சந்திக்கப்போகிறோம் என்ற அச்சம் ஒரு பிரிவினரிடையே நிலவுகிறது.