ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் உலக நாடுகளை மட்டுமல்லாது, அண்டை நாடான பாகிஸ்தானை நிலைகுலையச் செய்துள்ளது. குறிப்பாக ஹோமுஸ் ஜலசந்தி வழியாக வரும் எரிபொருள் வரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், பாகிஸ்தான் அரசு தற்போது மிகக் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அதிரடியாக அமல்படுத்தியுள்ளது.
இதன்படி அரசு வாகனங்களுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் அளவு 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 60 சதவீத அரசு வாகனங்கள் அடுத்த இரண்டு மாதங்களுக்குச் சாலைக்கு வராது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் தங்களின் இரண்டு மாத சம்பளம் மற்றும் இதர படிகளை முழுமையாக விட்டுக்கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் இனி வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை நாளாக இருக்கும் என்றும், ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்தே பணிபுரிய (Work From Home) அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்களின் வாழ்வியலிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகத் திருமணச் சடங்குகளில் இனி 200 விருந்தினர்களுக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், உணவில் ஒரே ஒரு வகை பதார்த்தம் மட்டுமே பரிமாறப்பட வேண்டும் என்றும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆடம்பர உணவுகளான பிரியாணி, ஹலீம் போன்றவற்றிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, அரசு முறை விருந்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வெளிநாட்டுப் பயணங்களுக்குப் பொதுவான தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மிக அவசியமான பயணங்கள் மேற்கொள்பவர்கள் ‘எகானமி கிளாஸில்’ மட்டுமே செல்ல வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் செல்லும் வாகனங்களின் வேகமும் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் மற்றும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கப் பாகிஸ்தான் அரசு எடுத்துள்ள இந்த ‘மெகா’ கட்டுப்பாடுகள் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
