மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் 3-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சபஹார் (Chabahar) வர்த்தக மண்டலம் அருகே அமெரிக்கப் போர் விமானங்கள் இன்று பயங்கரத் தாக்குதலை நடத்தியுள்ளன.

சபஹார் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஈரானிய ராணுவ தளங்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சபஹார் வர்த்தக மண்டலத்திற்குப் பின்னால் அடுத்தடுத்து பிரம்மாண்ட வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், வானத்தில் அமெரிக்கப் போர் விமானங்கள் வட்டமிடுவதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

இந்தச் சபஹார் பகுதி இந்தியாவுக்கு மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானைத் தவிர்த்துவிட்டு ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்குப் பொருட்களைக் கொண்டு செல்ல இந்தியா இந்தச் சபஹார் துறைமுகத்தையே நம்பியுள்ளது.

தற்போது அமெரிக்கா இந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளதால், இந்தியத் திட்டங்களுக்குப் பாதிப்பு ஏற்படுமா என்ற கவலை எழுந்துள்ளது.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏழு நாடுகளுக்கு அழைப்பு விடுத்து, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கப் போர் கப்பல்களை அனுப்பக் கோரியுள்ளார்.

போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டியுள்ளதால், உலக நாடுகள் அனைத்தும் இந்த மோதலால் பொருளாதாரச் சரிவைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.