அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர், உலக நாடுகளைப் பெரும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது. போர் தொடங்கிய 24 மணி நேரத்திலேயே ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்ட சம்பவம் உலகையே அதிர வைத்தது. இதற்குப் பதிலடியாக, உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணை பகுதியை ஈரான் முடக்கியுள்ளது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க அமெரிக்கா தற்காலிக அனுமதி அளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

​இந்தச் சூழலில், ஈரானின் ஆதரவு பெற்ற ஏமன் ஹவுதி குழுவினர் விடுத்துள்ள எச்சரிக்கை உலக வர்த்தகத்தைத் திணறடித்துள்ளது. “எங்கள் விரல்கள் துப்பாக்கியின் ட்ரிக்கரில் உள்ளன” என அறிவித்துள்ள அவர்கள், ஆசியா-ஐரோப்பா வர்த்தகத்திற்கு மிக முக்கியமான பாப் எல்-மண்டேப் ஜலசந்தியை மூடப்போவதாக மறைமுகமாக எச்சரித்துள்ளனர். உலகின் 10 சதவீத எரிபொருள் போக்குவரத்து நடைபெறும் இந்தப் பாதையும் மூடப்பட்டால், உலகளாவிய கடல்வழி எண்ணெய் வர்த்தகத்தில் 30 சதவீதம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது உலகப் பொருளாதாரத்திற்குப் பேரழிவை ஏற்படுத்தும் என நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.