​ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவிய வதந்திகளுக்கு, அவர் ஒரு ‘கிரிஸ்பியான’ வீடியோ மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஒரு கஃபே-வில் அமர்ந்து காபி ஆர்டர் செய்தபடி பேசிய நெதன்யாகு, “நான் செத்துட்டேன்… இந்த காபி மேல இருக்கிற ஆசையில!” என ஹீப்ரு மொழியில் நக்கலாகப் பேசி வதந்திகளைப் பொடியாக்கியுள்ளார்.

​மேலும், அவர் AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவில் தோன்றியதாகவும், அவருக்கு ஒரு கையில் ஆறு விரல்கள் இருந்ததாகவும் பரவிய ‘கான்ஸ்பிரசி’ தியரிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தனது இரு கைகளையும் கேமரா முன் காட்டி விரல்களை எண்ணிக் காண்பித்தார். “ஈரானை நாங்கள் மிகக் கடுமையாகத் தாக்கி வருகிறோம்; மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அருகிலேயே இருங்கள்” என நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளித்துள்ளார்.

முன்னதாக, “நெதன்யாகு உயிரோடு இருந்தால் அவரைத் தேடிப் பிடித்துக் கொல்லுவோம்” என ஈரானின் புரட்சிகர காவல் படை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த வீடியோ உலக அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.