குஜராத் மாநிலம் ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த மாணவர் ஒருவர் கடந்த 14ம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த மாணவர் எழுதி வைத்திருந்த 17 பக்கத் தற்கொலை கடிதம் சிக்கியது.
அதில் தன்னுடன் பயிலும் ஐந்து மாணவர்களே தனது தற்கொலைக்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். தற்கொலை செய்துகொண்ட மாணவர் ஒரு மாணவியைக் காதலித்து வந்த நிலையில் அந்தத் தொடர்பைக் கைவிடுமாறு சக மாணவர்கள் அவரை மிரட்டித் தாக்கியதோடு கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகத் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் தற்கொலைக்குத் தூண்டியதாகக் ஐந்து மாணவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.
தற்போது மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு தேர்வுகள் நடைபெற்று வருவதால் தங்களைத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று கோரி கைது செய்யப்பட்ட மாணவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் மாணவர்கள் தேர்வு எழுதச் செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
