கடந்த 2013-ம் ஆண்டு பி.டெக் படித்துக் கொண்டிருந்த போது, அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து, கடந்த 13 ஆண்டுகளாக அசைவற்று படுக்கையிலேயே கிடந்த ஹரிஷ் ராணாவின் போராட்டம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. மூளையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் எவ்வித உணர்வுகளுமின்றி ‘கோமா’ நிலையிலேயே வாழ்ந்து வந்த தனது மகனுக்கு, “கருணைக்கொலை” செய்ய அனுமதி கோரி அவரது பெற்றோர் உச்ச நீதிமன்றத்தை நாடினர். 13 ஆண்டுகளாகத் தங்கள் வீட்டை விற்றாவது மகனைக் காப்பாற்றிவிடலாம் எனப் போராடிய அந்தப் பெற்றோர், ஒருகட்டத்தில் இனி மீள வாய்ப்பே இல்லை என்ற நிலையில் இந்த வேதனையான முடிவை எடுத்தனர்.

​உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க அனுமதியைத் தொடர்ந்து, காஜியாபாத்தில் உள்ள அவரது இல்லத்திற்குப் பிரம்மா குமாரிகள் அமைப்பின் சகோதரி குமாரி லவ்லி தீதி நேரில் வந்து ஹரிஷ் ராணாவுக்கு இறுதி விடை கொடுத்தார். “அனைவரையும் மன்னித்துவிட்டு, அமைதியாக உறங்கு..” என்று கூறி அவர் நெற்றியில் சந்தனத் திலகமிட்டுத் துஆ செய்த காட்சி பார்ப்பவர்களின் கண்களைக் குளமாக்கியது. இந்தியாவில் “Passive Euthanasia” எனப்படும் கருணைக்கொலை சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மிக முக்கியமான தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது. 31 வயதில் ஒரு இளைஞனின் நீண்ட கால அவஸ்தை முடிவுக்கு வந்திருந்தாலும், அந்தப் பெற்றோரின் 13 ஆண்டுகால தியாகம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.