புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவைக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் மார்ச் 16 (நாளை) தொடங்குகிறது. இதில் மனு தாக்கல் செய்ய கடைசி நாள்‌மார்ச் 23 ஆகும்.

வாக்குப்பதிவிற்கு இன்னும் 24 நாட்களே உள்ள நிலையில், நாளை முதல் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்குகிறது.

இந்தத் தேர்தல் அறிவிப்பு குறித்து தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கரூர் தொகுதி எம்.பி. ஜோதிமணி, தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

“பொதுவாக தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடத்துவதே நடைமுறை. ஆனால், இந்த முறை தமிழ்நாட்டிற்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு தேர்தல் தேதியை ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வது கடினமான ஒன்றல்ல.

தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாகச் செயல்படுவது தேர்தல் தேதியிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது என்று குறிப்பிட்ட அவர், “பாஜகவின் இத்தகைய அரசியல் நகர்வுகளை எதிர்கொள்கிற அறிவும், தெளிவும் தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்தியா (INDIA) கூட்டணிக்கும் உண்டு” என்று சவாலும் விடுத்துள்ளார்.

மேலும் தமிழ்நாட்டிற்கு முன்னதாகவே புதுச்சேரியில் தேர்தல் நடத்தப்படுவது, ஆளுங்கட்சியின் தேர்தல் வியூகத்திற்குச் சாதகமாக அமையலாம் என்பதே எதிர்க்கட்சிகளின் பிரதானக் குற்றச்சாட்டாக உள்ளது. மேலும் 30 வருடங்களுக்குப் பிறகு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு தனித்தனியாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.