சமீபத்தில் நடந்து முடிந்த 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கியக் காரணமாக இருந்த தொடக்க வீரர் சஞ்சு சாம்சன், தனது சக வீரர் அபிஷேக் சர்மா குறித்து சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 98 ரன்கள் சேர்த்தது. குறிப்பாக, அபிஷேக் சர்மா வெறும் 18 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டினார். சஞ்சு சாம்சன் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி உட்பட தொடர்ச்சியாக மூன்று அரைசதங்களை விளாசி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார்.
இந்த நிலையில் இது தொடர்பாக இந்தியா டுடே மாநாட்டில் பேசிய சஞ்சு சாம்சன், ஆரம்பகாலத்தில் அபிஷேக் சர்மாவைப் பார்த்து இந்திய வீரர்கள் பொறாமைப்பட்டதாகக் கிண்டலாகக் குறிப்பிட்டார். “மைதானத்தில் அபிஷேக் விளையாடும்போது ரசிகர்கள் எழுப்பும் ஆரவாரம் மிக அதிகமாக இருக்கும். மக்கள் இவரை மட்டும்தான் விரும்புகிறார்களா? என்று நாங்கள் நினைப்போம். ஆனால், இன்று அவர் எங்கள் அணியின் சூப்பர் ஸ்டார்” என்று புகழ்ந்தார்.
மேலும், அபிஷேக் சர்மாவிற்கு ஒரு குட்டி அட்வைஸையும் சஞ்சு வழங்கினார். “அபிஷேக், சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோப்பா!” என்று அவர் கூறியது அரங்கத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
தங்கள் இருவருக்கும் இடையிலான பேட்டிங் பார்ட்னர்ஷிப் குறித்து சஞ்சு சாம்சன் பேசுகையில், “நாங்கள் இருவரும் பனி மற்றும் நெருப்பு அல்ல; இரண்டு பேருமே நெருப்புதான். 2024-ஆம் ஆண்டிலிருந்தே எங்கள் இருவருக்கும் இடையே ஒரு நல்ல புரிதல் உள்ளது. இது கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு இடையிலான நட்பு. களம் மற்றும் களத்திற்கு வெளியே அபிஷேக் மிகவும் துணிச்சலானவர். அவருடன் இணைந்து விளையாடுவது எனக்குப் பிடிக்கும்” என்றார்.
இறுதிப்போட்டியில் இவர்களின் அதிரடித் தொடக்கத்தால் இந்தியா 255 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்து, 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை முத்தமிட்டது குறிப்பிடத்தக்கது.
