பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, ஆட்டத்தை விட ஒரு சர்ச்சையான ரன் அவுட் மூலமாகவே இப்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பாகிஸ்தான் வீரர் சல்மான் அலி ஆகா அவுட்டான விதம், கிரிக்கெட் ரசிகர்களிடையே “விளையாட்டு தர்மம் எங்கே போனது?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. 39-வது ஓவரில் மெஹதி ஹசன் மிராஸ் வீசிய பந்தை ரிஸ்வான் தட்டிவிட, எதிர்பாராத விதமாக பந்து மெஹதியின் காலில் பட்டு நின்றது. அந்த நேரத்தில் கிரீஸை விட்டு வெளியே வந்த சல்மான், பந்தை எடுத்து கொடுக்க முயன்ற போது மெஹதியுடன் மோதினார். ஆனால், சல்மான் நிலைதடுமாறி நின்ற அந்த நொடியைப் பயன்படுத்திய மெஹதி, மின்னல் வேகத்தில் பந்தை எடுத்து ஸ்டம்பைத் தகர்த்தார்.
gotta feel for Salman Ali Agha, nothing new for Bangladeshis from timing out batsmen to this.pic.twitter.com/gK3rHCN6rC
— PCT Replays 2.0 (@ReplaysPCT) March 13, 2026
இந்த விசித்திரமான ரன் அவுட்டை பார்த்த சல்மான் ஆகா, மைதானத்திலேயே கடும் அதிர்ச்சி அடைந்தார். தேர்ட் அம்பயர் அவுட் கொடுத்ததும், ஆத்திரத்தை அடக்க முடியாமல் தனது கிளவுஸ் மற்றும் ஹெல்மெட்டை கழற்றி எறிந்துவிட்டு மைதானத்தை விட்டு வெளியேறினார். பங்களாதேஷ் வீரரின் இந்தச் செயல் ‘ஜென்டில்மேன் கேம்’ எனப்படும் கிரிக்கெட்டிற்கு அழகல்ல என பாகிஸ்தான் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். ஏற்கனவே முதல் போட்டியில் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான், தற்போது இந்த சர்ச்சையாலும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இந்த ‘மோசமான’ ரன் அவுட் வீடியோ இப்போது இணையத்தில் பெரும் விவாதத்தையே கிளப்பியுள்ளது!
