தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் நடிகர் நாசர் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஒரு கட்சியின் திட்டங்களை விட அதன் கொள்கை மற்றும் வரலாறே முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் நாசர் பேசியதாவது:
“நான் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராதவன். ஒரு பொதுவான மனிதனாக, மக்களின் சார்பாக இங்கு பேசுகிறேன். தற்போது நாம் தேர்தல் காலத்தை நெருங்கியுள்ளோம். இன்னும் ஓரிரு வாரங்களில் தேர்தல் வரவுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நமது வரிப்பணம், நாட்டின் முன்னேற்றம் ஆகியவற்றைத் தீர்மானிக்கக் கூடிய ஒரு அரசைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
ஒரு சாதாரண புடவை வாங்கச் சென்றால் கூட நாம் பல கேள்விகளைக் கேட்கிறோம். அப்படியிருக்க, நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போகும் ஒரு அரசைத் தேர்வு செய்யும்போது நமக்கு எத்தனை கேள்விகள் எழ வேண்டும்? ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த கேள்விகளை நாம் கேட்பதில்லை.
ஒரு கட்சிக்குத் தெளிவான கொள்கை இருக்க வேண்டும். ஆனால் இன்று நிலைமை மாறியிருக்கிறது. வெறும் பிரபலமாக இருந்தால் மட்டும் போதும் என்று கட்சி ஆரம்பிக்கிறார்கள். திட்டங்களைப் பட்டியலிடுவது மட்டுமே அரசியல் கிடையாது. ‘அனைவருக்கும் வீடு கட்டித் தருவேன்’ என்று கூறுவது ஒரு திட்டமே தவிர, அது கொள்கையாகாது.
எந்தக் கொள்கையின் அடிப்படையில் நீங்கள் ஆட்சியை நடத்தப் போகிறீர்கள் என்பதுதான் முக்கியம். தற்போதைய இந்த அரசு (திமுக) ஒரு கொள்கையோடு இயங்குகிறது. அதற்குப் பின்னால் ஒரு நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. அடுத்த தலைமுறைக்குச் சொல்லக்கூடிய வீரச்செயல்களும், தியாகங்களும், வரலாறும் அந்த இயக்கத்திற்கு இருக்கிறது. அதை விடுத்து, வெறும் சினிமாப் படங்களை மட்டும் பட்டியலிட்டு, அதன் மூலம் ஆட்சி அமைப்பேன் என்று சொன்னால், அது எனக்குத் தேவையில்லை,” என அவர் பேசினார். மேலும் பிரபலமாக இருப்பதால் மட்டும் கட்சி ஆரம்பித்து விடலாம் என்று நினைப்பதாக நாசர் கூறிய நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.
