டி20 உலகக்கோப்பையைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ள நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னதாக வீரர்களுக்குக் காட்டப்பட்ட ஒரு வீடியோதான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியதாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான அந்த வாழ்வா சாவா போராட்டத்திற்கு முன்னதாக, அணியின் வீடியோ அனலிஸ்ட் சுமார் 10 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு ஸ்பெஷல் படத்தை வீரர்களுக்குக் காட்டியுள்ளார்.

அதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வீரர்கள் கடந்து வந்த கரடுமுரடான பாதை, அவர்களின் வெற்றிக் கொண்டாட்டங்கள் மற்றும் நெகிழ்ச்சியான தருணங்கள் கோர்க்கப்பட்டிருந்தன.

குறிப்பாக ‘பாகுபலி’ படத்தின் பாடல்கள் மற்றும் அக்ஷய் குமாரின் ‘கேசரி’ படத்தில் வரும் ‘ஓ ஷேரா’ பாடல் அந்த வீடியோவில் பின்னணியில் ஒலிக்க, அதைப் பார்த்த வீரர்களின் அட்ரினலின் எகிறியுள்ளது. “100 இருதரப்பு தொடர்களில் ஜெயிப்பதை விட, ஒரு உலகக்கோப்பையை வெல்வதே முக்கியம்” என பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சொன்ன வார்த்தைகளும், இந்த வீடியோவும் இந்திய வீரர்களை ஆக்ரோஷத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றது.

இந்த உணர்ச்சிகரமான உந்துதல்தான் நியூசிலாந்து அணியை இறுதிப்போட்டியில் சுருட்டி எறிந்து, மீண்டும் கோப்பையை முத்தமிட இந்திய அணிக்கு பெரும் பலமாக அமைந்தது.

மைதானத்தில் காட்டிய வீரத்திற்குப் பின்னால் இப்படி ஒரு சென்டிமென்ட் கதை இருப்பதை சூர்யகுமார் யாதவ் தற்போது வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.