மும்பை ஹார்பர் ரயில் பாதையில், ஓடும் ரயிலிலிருந்து வாஷி ஆற்றில் குதித்துத் தற்கொலைக்கு முயன்ற 20 வயது இளம்பெண்ணை, அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் தங்கள் உயிரைப் பணையம் வைத்து மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது இளம்பெண் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணியளவில் லோக்கல் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். ரயில் வாஷி ஆற்றுப் பாலத்தைக் கடந்து சென்றபோது, எதிர்பாராத விதமாக ரயிலின் திறந்த கதவு வழியாக அந்தப் பெண் ஆற்றில் குதித்தார். அவர் முதுகில் சுமந்திருந்த ‘பேக்’ (Backpack) காற்றால் நிரம்பி மிதந்ததால், அவர் தண்ணீரில் உடனே மூழ்காமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
𝐁𝐥𝐨𝐜𝐤𝐞𝐝 𝐍𝐮𝐦𝐛𝐞𝐫 𝐓𝐫𝐢𝐠𝐠𝐞𝐫𝐬 𝐒𝐮𝐢𝐜𝐢𝐝𝐞 𝐀𝐭𝐭𝐞𝐦𝐩𝐭 𝐚𝐭 𝐕𝐚𝐬𝐡𝐢 𝐁𝐫𝐢𝐝𝐠𝐞 |
A dramatic rescue unfolded in Navi Mumbai after a young woman jumped into Vashi Creek following emotional distress. Alert local fishermen sprang into action and pulled her… pic.twitter.com/4A1ZHN7wEE
— MUMBAI NEWS (@Mumbaikhabar9) March 10, 2026
ஆற்றில் ஏதோ விழுந்ததைக் கவனித்த மீனவர்கள், உடனடியாகத் தங்கள் படகை அந்த இடத்திற்குச் செலுத்தினர். மகேஷ் சுதார் மற்றும் அவரது குழுவினர், தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை அதிரடியாக மீட்டுப் பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டு வந்தனர். மீனவர்களின் இந்தச் சமயோசிதச் செயல், ஒரு விலைமதிப்பற்ற உயிரைக் காப்பாற்றியது.
தகவலறிந்து வந்த போலீஸார், அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், தனது காதலன் எவ்விதக் காரணமும் இன்றி அலைபேசி மற்றும் சமூக வலைதளங்களில் தன்னைத் தொடர்பு கொள்ள முடியாதபடி ‘பிளாக்’ (Block) செய்ததால், கடுமையான மன உளைச்சலில் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அந்தப் பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பெண்ணுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையும், மனநல ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சரியான நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு, ஒரு உயிரைக் காப்பாற்றிய மீனவர்களின் செயலைப் பொதுமக்கள் பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
