மதுராந்தகம் அருகே அத்திவாக்கத்தில் சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்திற்குத் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாகச் சீரழிந்துவிட்டதையே இந்த கொடூரச் சம்பவம் காட்டுவதாக அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

14 வயது சிறுமிக்கு இத்தகைய அவலம் நேரும் அளவிற்குத் தமிழகம் பாதுகாப்பற்ற மாநிலமாக மாறியிருப்பது மிகப்பெரிய அவமானம் என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார். தனது கட்சியினர் நடத்தும் மதுபான ஆலைகளின் வருமானத்திற்காகத் திமுக அரசு பெண் குழந்தைகளின் பாதுகாப்பை முழுமையாகப் புறக்கணித்துவிட்டதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பாக வீட்டிற்குத் திரும்ப முடியாத நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதுபோன்ற தொடர்ச்சியான பாலியல் குற்றங்கள் குற்றவாளிகளுக்குக் காவல்துறை மற்றும் அரசின் மீது எவ்வித அச்சமும் இல்லை என்பதையே வெளிப்படுத்துவதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தை ஒரு சட்டமற்ற மாநிலமாகத் திமுக அரசு மாற்றிவிட்டதாகக் கூறியுள்ள அவர் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் 100 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டதாக விமர்சித்துள்ளார். குழந்தைகள் பாதுகாப்பின்றி இருக்கும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளம்பரம் தேடிக் கொள்வதில் மட்டுமே குறியாக இருப்பதாகச் சாடியுள்ளார்.

சட்டம் ஒழுங்கைக் கையாளத் தெரியவில்லை என்றால் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி வீட்டுக்குக் கிளம்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.