சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில் புதிதாக அமைக்கப்பட்ட மின்தூக்கி கட்டுமானப் பணிகளில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். பக்தர்களின் காணிக்கை நிதியிலிருந்து சுமார் 3.55 கோடி ரூபாய் செலவில், 60 அடி உயரத்தில் உள்ள சன்னதிக்குச் செல்ல இரண்டு மின்தூக்கிகள் அமைக்கப்பட்டன.

ஆனால், இரண்டு ஆண்டுகளாகப் பணிகள் நடந்தும், திறப்பு விழாவின் போது இந்த மின்தூக்கிகள் சரியாகச் செயல்படவில்லை என்றும், தலா 20 பேர் செல்லும் திறன் கொண்டதாகக் கூறப்பட்ட இவை 10 பேரைக் கூட தாங்கும் வலிமை அற்று இருப்பதாகவும் அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் விமர்சித்துள்ளார்.

மேலும், மின்தூக்கி வேலை செய்யாத ஆத்திரத்தில் அங்குள்ள ஊழியரை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தாக்கியதாகக் குறிப்பிட்ட அண்ணாமலை, மக்களின் வரிப்பணமும் பக்தர்களின் காணிக்கையும் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்திற்காகச் செலவிடப்பட்ட 3.55 கோடி ரூபாய்க்கான முழு கணக்குகளையும் இந்து சமய அறநிலையத் துறை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றும், மின்தூக்கிகளின் தரம் குறித்து முறையான ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.