நடிகர் விக்ரம் அரிய வகை ‘லார் கிப்பானை’ (Lar Gibbon) தன் கையில் வைத்திருப்பது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரிய வகை வனவிலங்குகளை வீட்டில் வளர்ப்பதும், காட்சிப்படுத்துவதும் சட்டப்படி குற்றம் என்பதால், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்தனர்.
இதையடுத்து நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், அந்தப் அபூர்வ குரங்கின் உரிமையாளர் ஈரோட்டைச் சேர்ந்த கேசவநாதன் என்பது தெரியவந்தது. வனத்துறை வழங்கிய அழைப்பாணையின் பேரில், கேசவநாதன் ஈரோடு வனத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் வனத்துறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணையில், லார் கிப்பான் வகை குரங்கை அவர் எங்கிருந்து வாங்கினார், இதற்காக யாரிடம் பணப்பரிவர்த்தனை நடந்தது மற்றும் சட்டவிரோதமாக வனவிலங்குகளைக் கடத்தும் கும்பலுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. மேலும், இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்றும் ஆராயப்பட்டு வருகிறது.
சினிமா பிரபலங்கள் இதுபோன்ற அரிய வகை உயிரினங்களை வீடியோவாக வெளியிடுவது சட்டச் சிக்கலை உருவாக்கும் நிலையில், வனத்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கை வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விசாரணையின் முடிவிலேயே கேசவநாதன் மீது எடுக்கப்படவுள்ள அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்துத் தெரியவரும்.
