தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் பள்ளி வேன் டிரைவரை, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

திருவிடைமருதூர் அருகே உள்ள வடமட்டம் கிராமத்தில் செயல்படும் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் (50) என்பவர் வேன் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளி வேலை நேரம் முடிந்ததும், வேனை தனது வீட்டின் அருகே நிறுத்தி வைப்பது வழக்கம். அந்தப் பகுதியில் உள்ள சிறுவர், சிறுமியர் அந்த வேனில் ஏறி விளையாடுவது வழக்கமாக இருந்துள்ளது.

சம்பவத்தன்று, அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர் வேனில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஓட்டுநர் பெருமாள் அந்தச் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்துத் தகவலறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தப் புகார் மனு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மகளிர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பெருமாள் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, பெருமாள் மீது குழந்தைகள் பாதுகாப்புச் சட்டமான போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை இன்று கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பள்ளி வேன் ஓட்டுநரே இத்தகைய செயலில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.