இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, சமூக ஊடகப் புகழ்பெற்ற நடிகை அகிருதி அகர்வாலை கரம் பிடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, அகிருதியுடன் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்ட மகிழ்ச்சியான செய்தியை பிரித்வி ஷா அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.
மேலும் லக்னோவில் பிறந்த அகிருதி அகர்வால், மும்பையில் தனது படிப்பை முடித்துவிட்டு மாடலிங் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். குறிப்பாக, தெலுங்கில் வெளியான சைக்காலஜிக்கல் கிரைம் திரில்லர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தென்னிந்தியத் திரையுலகிலும் தடம் பதித்துள்ளார்.
இதனால் கடந்த சில ஆண்டுகளாக பேட்டிங் மற்றும் உடற்தகுதி தொடர்பான சவால்களைச் சந்தித்து வந்த பிரித்வி ஷாவுக்கு, இந்தத் திருமணச் செய்தி அவரது தனிப்பட்ட வாழ்வில் ஒரு புதிய தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. 2025 ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாலும் ஏலம் எடுக்கப்படாத நிலையில், 2026 மினி ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி மீண்டும் அவரைத் தனது அணியில் சேர்த்துள்ளது.
தற்போது விளையாட்டுத் துறையில் மீண்டு வர முயற்சி செய்து வரும் பிரித்வி ஷா, தனது நீண்ட கால தோழியான அகிருதியைத் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
