சர்வதேச அளவில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, தமிழகத்தில் சமையல் எரிவாயு விநியோக நடைமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வீட்டு உபயோக சிலிண்டர்களுக்குப் பாதிப்பில்லை என்றாலும், வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக எரிவாயு இறக்குமதி மற்றும் விநியோகத்தில் சிக்கல்கள் எழுந்துள்ளன. இதன் தாக்கமாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தொழிற்சாலைகள் மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

இதற்குக் காத்திருக்காமல், வணிக நிறுவனங்கள் தங்களது தேவைக்கு மாற்று எரிசக்தி ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விநியோகத்தைச் சீர்செய்யும் வகையில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (BPCL) நிறுவனம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி ஒருமுறை சிலிண்டர் பதிவு செய்த நுகர்வோர், அடுத்த சிலிண்டருக்கு 25 நாட்களுக்குப் பிறகே பதிவு செய்ய முடியும் என்ற நடைமுறை மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்தில் தற்போது எந்தச் சிக்கலும் இல்லை என அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

வணிக சிலிண்டர்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், கையிருப்பில் உள்ள சிலிண்டர்களை அத்தியாவசியத் தேவைகளுக்கு வழங்க முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. குறிப்பாக மருத்துவமனைகள். கல்வி நிலையங்களில் உள்ள உணவகங்கள் ஆகிய இடங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிபிசிஎல் (BPCL) விளக்கம் அளித்துள்ளது.

மேலும் சர்வதேசச் சூழலைப் பொறுத்து இந்த விநியோகக் கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திடீர் அறிவிப்பால் உணவகங்கள் மற்றும் சிறு தொழிற்சாலைகள் கவலையடைந்துள்ளன