துபாயில் தெருப்பூனைகளின் பசியைப் போக்கவும், பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்கவும் ‘இஹ்சான்’ என்ற நவீன செயற்கை நுண்ணறிவு எந்திரங்களை அந்நாட்டு மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. அமீரகத்தில் தெரு நாய்கள் இல்லாத நிலையில், பூங்காக்கள் மற்றும் குடியிருப்புகளில் அதிக அளவில் காணப்படும் பூனைகளுக்கு உணவளிக்க இந்தத் திட்டம் பெரிதும் உதவுகிறது.

பொதுமக்கள் தங்களின் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை இந்த எந்திரத்தில் போடும்போது, அதற்குப் பதிலாக எந்திரத்தின் கீழ்ப்பகுதியில் பூனைகளுக்கான உணவு தானாகவே வெளிவரும். இதன் மூலம் சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்படுவதோடு, தெருப்பூனைகளின் உணவுத் தேவையும் எளிதாகப் பூர்த்தியாகிறது.

தற்போது துபாய் மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் முக்கிய வளாகங்களில் மொத்தம் 12 ‘இஹ்சான்’ எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. உணவு வழங்குவதுடன் மட்டுமல்லாமல், நோயால் பாதிக்கப்பட்ட பூனைகளை மீட்டு சிகிச்சை அளிப்பது மற்றும் அவற்றுக்குத் தடுப்பூசி போடுவது போன்ற பணிகளையும் மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

விலங்குகள் மீதான கருணையையும், மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வையும் ஒரே நேரத்தில் மக்களிடையே கொண்டு செல்லும் இந்த முயற்சி ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது.