சென்னை நெற்குன்றம் பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் 23 வயது இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த அத்துமீறல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் வீட்டிற்கு எதிரே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மணிஷ்குமார் என்ற கட்டிடத் தொழிலாளி வசித்து வருகிறார்.
அவருடன் அந்தப் பெண் நட்பு ரீதியாகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மணிஷ்குமாரின் வீட்டிற்கு அந்த இளம்பெண் சென்றபோது மதுபோதையில் இருந்த மணிஷ்குமார் திடீரென அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
மணிஷ்குமாரின் பிடியிலிருந்து தப்பி ஓடி வந்த அந்த இளம்பெண் நடந்த சம்பவத்தைக் கூறித் தனது தாயிடம் அழுதுள்ளார். இது குறித்து உடனடியாகக் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் மணிஷ்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
