பாலிவுட் திரையுலகின் ‘பிக் பி’ என போற்றப்படும் அமிதாப் பச்சன், உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் தனது ரியல் எஸ்டேட் முதலீடுகளைத் தீவிரப்படுத்தி வருகிறார். தொடர்ந்து படங்களில் நடிப்பது, ‘கோன் பனேகா குரோர்பதி’ போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது மற்றும் பல்வேறு பிரபல நிறுவனங்களின் விளம்பரங்களில் தோன்றுவது என அமிதாப் பச்சன் தொடர்ந்து வருவாய் ஈட்டி வருகிறார். இவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.1,600 கோடி எனக் கணிக்கப்பட்டுள்ளது.
திரையுலகைத் தாண்டி, ரியல் எஸ்டேட் துறையில் அமிதாப் பச்சன் அதிக கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக, கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் பச்சன் குடும்பத்தினர் ரியல் எஸ்டேட் துறையில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வரிசையில், தற்போது அயோத்தி ராமர் கோயில் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலம் வாங்குவதில் அமிதாப் பச்சன் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே அயோத்தியில் மூன்று இடங்களில் நிலம் வாங்கியுள்ள அவர், தற்போது கூடுதலாக 2.67 ஏக்கர் நிலத்தை வாங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.35 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும் இந்த நிலம் வாங்குதலை ஒரு நீண்டகால முதலீடாகவே அமிதாப் பச்சன் கருதுவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அயோத்தியில் அதிகரித்து வரும் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அவர் இந்த முதலீடுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
