மத்திய கிழக்கில் தற்பொழுது நிலவி வரும் சூழல் பெரும் கவலை அளிப்பதாக உள்ளது. பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் மூத்த தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதாகக் கூறப்படும் செய்தி, உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதற்குப் பழிவாங்கும் விதமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இதற்குப் பெரிய விலை கொடுக்க நேரிடும் என்று ஈரானின் பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானைத் துண்டு துண்டாக உடைக்க அமெரிக்கா முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், பல அமெரிக்க வீரர்களை ஈரான் சிறைபிடித்துள்ளதாகவும்,300 மில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்காவின் THAAD ராடார் அமைப்பைத் தரைமட்டமாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தப் போர்ச் சூழலால் வளைகுடா நாடுகளில் கடும் பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் துபாய் போன்ற நகரங்களில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. அண்டை நாடுகள் தங்கள் நிலப்பரப்பை அமெரிக்கா பயன்படுத்த அனுமதித்தால், அந்த நாடுகளும் தாக்குதலுக்கு உள்ளாகும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளுடன் தொடரும் இந்தமோதல், உலகளாவிய பொருளாதாரத்தையும் அமைதியையும் ஒரு கேள்விக்குறியாக மாற்றியுள்ளது.