நேபாள பொதுத்தேர்தலில், முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியை பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து, ராஷ்ட்ரீய சுதந்திர கட்சியின் சார்பில் போட்டியிட்ட 35 வயது இளைஞர் பாலேந்திர ஷா அபார வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் நேபாளத்தின் அடுத்த பிரதமராக அவர் பொறுப்பேற்க உள்ளார்.
நேபாள பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் உள்ள 275 இடங்களில், ஆட்சி அமைக்க 138 இடங்கள் தேவை என்ற நிலையில், பாலேந்திர ஷாவின் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி 100-க்கும் மேற்பட்ட நேரடித் தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜாப்பா-5 தொகுதியில், நான்கு முறை பிரதமராக இருந்த 74 வயது மூத்த தலைவர் கே.பி. சர்மா ஒலியை, முன்னாள் மேயரான பாலேந்திர ஷா 49,614 வாக்குகள் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வ வைத்துள்ளார். கடந்த 1990 முதல் அந்தத் தொகுதியில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஒலியை வீழ்த்தியது அரசியல் நோக்கர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் யார் இந்த பாலேந்திர ஷா என்று தற்போது பார்ப்போம். இவர் அடிப்படையில் ஒரு ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியர் (Structural Engineer). இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இசை மீதான ஆர்வத்தால் ராப் பாடகராக உருவெடுத்து இளைஞர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றவர்.
கடந்த 2022-ல் காத்மாண்டு மாநகராட்சி மேயராக சுயேச்சையாக வெற்றி பெற்று அசத்தினார். கடந்த ஜனவரி மாதம் மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராஷ்ட்ரீய சுதந்திர கட்சியில் இணைந்தார். கடந்த 2025-ஆம் ஆண்டில் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசு சமூக வலைதளங்களுக்குத் தடை விதித்தபோது, அதற்கு எதிராக இளைஞர்களைத் திரட்டி பாலேந்திர ஷா நடத்திய போராட்டமே ஒலி அரசின் வீழ்ச்சிக்கு வித்தாக அமைந்தது. ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய நேபாள இளைஞர்கள், பாலேந்திர ஷாவுக்கு ஏகோபித்த ஆதரவை அளித்துள்ளனர்.
மேலும் இளைஞர்களின் எழுச்சியாகக் கருதப்படும் இந்தத் தேர்தல் முடிவு, நேபாள அரசியலில் புதிய சகாப்தத்தைப் பதிவு செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
