சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் தின விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விஜய், பெண்களுக்கான அதிரடித் தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கினார். பெண்களுக்கு மாதம் ₹2,500 உதவித்தொகை, ஆண்டுக்கு 6 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள், பள்ளி மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ₹15,000 கல்வி உதவித்தொகை மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கு ₹5 லட்சம் வரை 100% மானியம் போன்ற 9 முக்கிய வாக்குறுதிகளை அவர் அறிவித்தார்.

தமிழக பட்ஜெட்டில் 30 சதவீதம் “ஸ்டாலின் சார் வரி” என்ற பெயரில் ஊழலுக்கே செல்வதாகவும், இந்தச் சுரண்டலைத் தடுத்தாலே மக்களுக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களையும் நிதிப் பற்றாக்குறை இன்றிச் செயல்படுத்த முடியும் என்றும் அவர் மேடையில் முழங்கினார்.

தொடர்ந்து பேசிய விஜய், ஆளுங்கட்சி ஊழலை மறைக்கவே நிதி இல்லை என்று பொய் சொல்வதாகவும், தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களுக்குப் பணம் விநியோகிப்பது எப்படி என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளால் தொண்டர்கள் மனவேதனை அடைவது தனக்கு வருத்தத்தை அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அந்தப் பிரச்சினைகள் எதற்கும் தான் கவலைப்படவில்லை என்றும், அவை நேரத்தை வீணடிக்கும் தேவையற்ற விஷயங்கள் என்றும் கூறினார்.

“தனிப்பட்ட விவகாரங்களை நான் பார்த்துக்கொள்கிறேன், நாம் அனைவரும் இணைந்து மக்கள் நலப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவோம்” என்று கூறி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.