உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் வீட்டுச் செலவுக்குப் பணம் கேட்ட தந்தையை, அவரது சொந்த மகனே இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லாரி ஓட்டுநரான ராகேஷ், தனது மகன் சத்யேந்திராவிடம் குடும்பச் செலவுகளுக்குப் பணம் தருமாறு கேட்டுள்ளார். ஓலா கார் ஓட்டுநரான சத்யேந்திரா பணம் தர மறுத்ததால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த ராகேஷ், நண்பர்கள் முன்னிலையில் தனது மகனை ஓங்கி அறைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சத்யேந்திரா, அருகில் இருந்த டிராக்டரில் இருந்து இரும்புக் கம்பியை எடுத்துத் தந்தையின் தலையில் சரமாரியாகத் தாக்கியதில், ராகேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராகேஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பொது இடத்தில் தந்தை அறைந்ததால் ஏற்பட்ட அவமானத்தில் இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட சத்யேந்திரா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு சத்யேந்திரா குடும்பச் செலவுகளைக் கவனிக்காமல் இருந்ததே இந்தத் தகராறுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பெற்ற தந்தையையே மகன் அடித்துக் கொன்ற இந்தச் சம்பவம் நொய்டா பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
