தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் அரசியல் களம் பெரும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளத் திமுக கூட்டணியும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அதிமுக மற்றும் பாஜக கூட்டணியும் தீவிரமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் அனைத்துக் கட்சிகளும் பொதுக்கூட்டங்கள் மற்றும் தெருமுனைப் பிரச்சாரங்கள் மூலம் பொதுமக்களைச் சந்தித்து வருகின்றன. இந்தத் தேர்தல் களத்தில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் அதிமுக சார்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கௌதமி கலந்து கொண்டு உரையாற்றினார். மேடையில் பேசிய அவர் தமிழகத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்க அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஜெயலலிதா பாணியில் மக்களிடம் பேசினார்.
ஆனால் அவர் பேசிக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவும் பெரும்பாலான நாற்காலிகள் காலியாகவும் இருந்தன. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே தொண்டர்கள் இருந்ததால் கௌதமியின் கேள்விகளுக்குப் போதிய வரவேற்போ ஆரவாரமோ அங்கிருந்தவர்களிடம் இருந்து கிடைக்கவில்லை.
கூட்டத்தில் கூட்டம் குறைவாக இருந்ததைக் கண்டு அதிருப்தியடைந்த கௌதமி தனது பேச்சின் போதே அது குறித்து வருத்தத்தைத் தெரிவித்தார். கூட்டம் தொடங்கிய போது இருந்ததை விட இப்போது மக்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர் இது நியாயமானது தான் என்றும் வீட்டிற்குத் திரும்பியவர்கள் மீது தமக்கு எவ்விதக் கோபமும் இல்லை என்றும் பேசினார்.
கௌதமி பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால் அந்தப் பொதுக்கூட்டங்களைப் போலவே அதிமுக கூட்டங்களிலும் நாற்காலிகள் காலியாக இருப்பதாகத் திமுகவினர் இந்தச் சம்பவத்தை விமர்சித்து வருகின்றனர்.
