திருப்பூரில் அரசுப் பேருந்து நடத்துனர் மீது கல்லூரி மாணவர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரத்தில் இருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவரிடம், நடத்துனர் டிக்கெட் எடுக்குமாறு கேட்டுள்ளார்.

மேலும் அதற்கு அந்த மாணவர், “என்னிடமே டிக்கெட் கேட்கிறாயா?” என்று ஆவேசமாகப் பேசியதோடு, நடத்துனருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த மாணவர், சக பயணிகள் முன்னிலையிலேயே நடத்துனரை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த நடத்துனர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், பேருந்தில் ரகளையில் ஈடுபட்ட அந்த மாணவரைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர் மீது, அதுவும் ஒரு மாணவர் இத்தகைய வன்முறையில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒழுக்கத்தைப் போதிக்க வேண்டிய கல்விப் பருவத்தில் உள்ள மாணவர்கள், சட்டத்தைக் கையில் எடுக்கும் இதுபோன்ற போக்குகள் சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.