ஆந்திரப் பிரதேசத்தில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தைச் சரிசெய்யும் நோக்கில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு புதிய மக்கள் தொகை மேலாண்மைக் கொள்கை குறித்த வரைவுத் திட்டத்தைச் சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ளார். மாநிலத்தின் மொத்தக் கருவுறுதல் விகிதம் தற்போது ஒன்று புள்ளி ஐந்து என்ற அளவில் குறைந்துள்ளதால் அதனை 2.1 என்ற இலக்கை நோக்கி உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த வரைவுத் திட்டத்தின்படி இரண்டாவது மற்றும் மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிகளுக்கு இருபத்தையாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்றாவது குழந்தைக்கு ஐந்து வயது வரை மாதம் ஆயிரம் ரூபாய் ஊட்டச்சத்து உதவித்தொகையாகவும் பதினெட்டு வயது வரை இலவசக் கல்வியும் வழங்கப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தில் மற்றுமொரு முக்கிய அம்சமாகப் பிரசவ கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கு பன்னிரண்டு மாதங்களும் தந்தைக்கு இரண்டு மாதங்களும் விடுமுறை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்குத் தனியார் பங்களிப்புடன் கூடிய நவீனச் சிகிச்சை முறைகள் வழங்கப்படும் என்றும் இந்த வரைவுத் திட்டம் குறித்து ஒரு மாதம் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மார்ச் மாத இறுதிக்குள் இந்தக் கொள்கை இறுதி செய்யப்பட்டு வரும் ஏப்ரல் மாதம் முதல் தேதி முதல் மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு வரும் என்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.