தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் பிரச்சார வாகனத் தொடக்க நிகழ்ச்சி ஈரோடு மாவட்டம் கோபி பேருந்து நிலையத்தில் இன்று நடைபெற்றது. அக்கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கலந்துகொண்டு, கொடியசைத்து பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் கூறியதாவது, “தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்கட்ட பிரச்சாரம் இன்று ஈரோடு சட்டமன்றத் தொகுதியில் தொடங்கப்பட்டுள்ளது.

கட்சியின் பொதுக்குழுவில் தலைவர் விஜய் அறிமுகம் செய்த ‘விசில்’ சின்னத்தை பட்டிதொட்டியெங்கும் கொண்டு செல்லும் வகையில் இந்த வாகனப் பிரச்சாரம் அமையவுள்ளது. இளைஞர்களும் பெண்களும் இந்தச் சின்னத்தை ஏற்கனவே உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளனர்.”

திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், “ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய உன்னதமான வாக்குகளை மக்கள் வீணடிக்கக் கூடாது. கவர்ச்சிகரமான திட்டங்களைக் கூறி திமுகவினர் மக்களை ஏமாற்றி வருகின்றனர். தற்போது 3,000 ரூபாய் வழங்கப்படும் எனக் கூறுவதும் வெறும் ஏமாற்று வேலையே. எனவே, மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து திமுக-வை வீழ்த்த வாக்கு அளிக்க வேண்டும்.

“காங்கிரஸ் எப்போதுமே திமுக-வுடன் தான் கூட்டணியில் இருக்கும். எங்களிடம் (தவெக) வந்துவிடுவோம் எனப் பூச்சாண்டி காட்டி, திமுக-விடம் கூடுதல் இடங்களைப் பெறுவதே அவர்களின் தந்திரம் .எங்கள் தலைவர் தான் முதன்முதலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து பேசினார். அதன் பிறகு தமிழகத்தில் அந்த குரல் ஓங்கி ஒலித்ததாகவும் தங்களால் தான் காங்கிரசுக்கு கூடுதல் சீட் ஒதுக்கப்பட்ட தாகவும் கூறினார்.

“அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுமானால் தவெக-விற்கு வரலாம். இந்த முறை அதிமுக-வில் அவருக்குப் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்றே தோன்றுகிறது. அவர் விருப்பம் தெரிவித்தால், அவரைச் சேர்ப்பது குறித்துப் பரிசீலிக்கலாம் என்றார் . மேலும் புகழேந்தி குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “அவர் என்னுடைய நண்பர் அல்ல; அவருக்குப் பல நண்பர்கள் இருக்கிறார்கள்,” எனச் சுருக்கமாகப் பதிலளித்துச் சென்றார்.