திருச்சி ரயில்வே கோட்ட அலுவலக நுழைவு வாயிலில் ‘கர்தவ்ய த்வார்’ என இந்தியில் பெயரிடப்பட்டதற்குப் பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ் பற்றைக் குறிப்பிட்டு அவர் விடுத்திருக்கும் கோரிக்கை அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தின் புதிய வரவேற்பு வளைவில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. அதில் ‘கர்தவ்ய த்வார்’ (கடமை வாசல்) என்ற இந்திச் சொல்லே தமிழிலும், ஆங்கிலத்திலும் அப்படியே மொழிபெயர்ப்பு (Transliteration) செய்யப்பட்டு எழுதப்பட்டிருந்தது. இது தமிழ் மக்களிடையே பெரும் குழப்பத்தையும், மொழி ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ‘X’ (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பெயர்கள் குறிப்பிடப்படுவது வழக்கம். ஆனால், திருச்சியில் முறையான தமிழ் மொழிபெயர்ப்பு இன்றி இந்திச் சொல்லே தமிழிலும் பொறிக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள பற்றைத் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். உலக நாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம் தமிழின் தொன்மையைப் பெருமிதத்தோடு குறிப்பிடுபவர் அவர். சமீபத்தில் மலேசியப் பல்கலைக்கழகத்தில் ‘திருவள்ளுவர் இருக்கை’ அமைக்க அவர் மேற்கொண்ட முயற்சியும் இதற்குச் சான்றாகும்.”
“மத்திய அரசு தமிழுக்குத் தொடர்ந்து அங்கீகாரம் அளித்து வரும் நிலையில், இதுபோன்ற குளறுபடிகள் அந்த நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக அமைந்துவிடுகின்றன. எனவே, ரயில்வே அதிகாரிகள் உடனடியாக இதில் தலையிட்டு, அந்த நுழைவு வாயிலுக்குத் தூய தமிழில் பெயர் சூட்ட வேண்டும்,” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்ப்புகள் வலுத்ததைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய அந்த இந்திப் பெயரை அகற்றிட ரயில்வே அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக மத்திய அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமி பிரதமரைப் பாராட்டும் விதமாக அறிக்கை வெளியிட்டிருப்பது அரசியல் அரங்கில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
