தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய்யின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியுள்ளதாகக் கூறப்படும் தகவல் தமிழக அரசியலிலும் சினிமா வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1999-ம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த தொழில் அதிபர் மகளான சங்கீதாவை விஜய் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சங்கீதா செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த மனுவில், விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சில புகார்கள் மற்றும் பொருளாதாரக் கட்டுப்பாடுகள் குறித்த காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு, வரும் ஏப்ரல் 20-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாகத் தெரிகிறது.
தமிழக அரசியலில் தடம் பதித்து, தீவிரமாகச் செயல்பட்டு வரும் விஜய்க்கு, இந்தத் தனிப்பட்ட சிக்கல் ஒரு பெரும் சவாலாகக் கருதப்படுகிறது. அவரது அரசியல் பிம்பத்தைச் சிதைக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தைக் கையாளக்கூடும் என்பதால், இந்தப் பிரச்னையைச் சுமூகமாக முடிக்க விஜய் தரப்பு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் ஒரு பகுதியாக, விவாகரத்து மனுவைத் திரும்பப் பெறக் கோரி சங்கீதாவிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மனைவி மற்றும் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, சுமார் 250 கோடி ரூபாய் வரை ஜீவனாம்சமாக வழங்க விஜய் முன்வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஏற்கனவே நடிகை சங்கீதாவுக்கு லண்டனில் 400 கோடி வரை சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குடும்பக் கௌரவம் மற்றும் அரசியல் எதிர்காலத்தைக் காக்க இந்த மிகப்பெரிய தொகையை வழங்க அவர் சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது.
இருப்பினும், இந்தச் சமரசத் திட்டத்திற்கு சங்கீதா தரப்பு உடன்படுமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஏப்ரல் 20-ம் தேதி நீதிமன்ற விசாரணையின் போது விஜய் மற்றும் சங்கீதா இருவரும் நேரில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது தொடர்பான முடிவு என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
