ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் கூட்டுத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 787-ஆக உயர்ந்துள்ளதாக ஈரான் ரெட் க்ரசெண்ட் (Red Crescent) அமைப்பு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் தொடங்கி நான்கு நாட்களே ஆகும் நிலையில், உயிரிழப்புகள் இவ்வளவு வேகமாக அதிகரித்திருப்பது உலக நாடுகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஈரான் தரப்பில் ராணுவ இலக்குகள் மட்டுமன்றி குடியிருப்புப் பகுதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

​அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) சமீபத்தில் அளித்த பேட்டியில், இந்த ராணுவ நடவடிக்கை ஒரு நாள் அல்லது ஒரு இரவில் முடிந்துவிடாது என்றும், இது 6 வாரங்கள் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் தளங்களை முழுமையாக அழிப்பதே இந்த ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury)-யின் நோக்கம் என்று அமெரிக்கா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஈரானின் முக்கியத் தலைவர்கள் பலர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி வருவதால், மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகம் மேலும் சூழ்ந்துள்ளது.