தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து விவகாரம் அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பேச்சாக மாறியுள்ள நிலையில், திமுக நிர்வாகியும் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் விஜய்யிடம் சில காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசுவது அநாகரிகம் என்று குறிப்பிட்ட அவர், ஆனால் ஒரு அரசியல் தலைவராக அவர் மக்களுக்கு இதுவரை என்ன செய்துள்ளார் என்ற பட்டியலை வெளியிட வேண்டும் என்று சவால் விடுத்துள்ளார்.

தான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே தனது சொந்தச் செலவில் ஏழை மக்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் மருந்துகளை வழங்கியதாகக் குறிப்பிட்ட திவ்யா, திரையில் நடனம் ஆடுபவர்கள் எல்லாம் உண்மையான தலைவர்கள் ஆக முடியாது என்று விமர்சித்துள்ளார்.

மேலும், தந்தை பெரியாரைக் கொள்கைத் தலைவராகக் கொண்டுள்ள விஜய்யின் கட்சியில், பெண்களைக் கொச்சையாகப் பேசுபவர்கள் இருப்பதாகவும், பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை என்றும் திவ்யா சத்யராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

“எவன் செத்தால் எனக்கு என்ன” என்று ரம்யா கிருஷ்ணன் பாணியில் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு ஸ்லோ மோஷனில் பேசுபவர்கள் தலைவராக முடியாது என்றும், தரையில் இறங்கி வேலை செய்பவர்களே உண்மையான தலைவர்கள் என்றும் அவர் சாடியுள்ளார்.

விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ள நிலையில், திவ்யாவின் இந்த வீடியோ பதிவு தவெக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.