2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 28-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் எதிர்பாராத போர் பதற்றங்கள், வெளிநாட்டு வீரர்களின் வருகை மற்றும் பயணத் திட்டமிடலில் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளன.

ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் வீரர்கள், வழக்கமாகத் துபாய் அல்லது அபுதாபி வழியாகவே இந்தியா வருவது வழக்கம். தற்போது அந்த விமான நிலையங்களில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், வீரர்களைப் பாதுகாப்பாக இந்தியா அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், போர் பதற்றம் நிலவும் வான்வெளியில் பயணம் செய்ய சில வெளிநாட்டு வீரர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் நடைபெறவுள்ள 2026 டி20 உலகக்கோப்பையை நிர்வகிக்கும் ஐசிசி (ICC), ஐபிஎல் வீரர்களுக்காக சிறப்பு “Travel Support Desk” என்ற உதவி மையத்தை அமைத்துள்ளது. வளைகுடா நாடுகளைத் தவிர்த்து, வீரர்கள் ஐரோப்பா அல்லது தென்கிழக்கு ஆசியா வழியாக இந்தியா வர மாற்றுப் பயண ஏற்பாடுகளை இந்த மையம் செய்து வருகிறது.

மார்ச் 28 முதல் மே 31 வரை நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் அட்டவணையை, மார்ச் மாதம் நடைபெறவுள்ள தமிழகம், மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களின் தேதிகளைக் கருத்தில் கொண்டு, 2024 சீசனைப் போலவே இரண்டு கட்டங்களாக வெளியிட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. பயணக் கட்டுப்பாடுகள் நீடிக்கும் பட்சத்தில், வெளிநாட்டு வீரர்கள் நேரடியாக வந்து சேரக்கூடிய சர்வதேச விமான நிலைய வசதிகள் கொண்ட நகரங்களில் அதிக போட்டிகளை நடத்தவும் பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.

ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கடைசி நேரத்தில் வீரர்கள் விலகுவதைத் தடுக்க பிசிசிஐ புதிய விதிகளை அறிவித்துள்ளது. முறையான மருத்துவக் காரணமின்றி ஏலத்தில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் விலகினால், அவர்களுக்கு இரண்டு சீசன்கள் விளையாடத் தடை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டு வீரருக்கான அதிகபட்ச ஏலத் தொகை ₹18 கோடியாக வரையறுக்கப்பட்டுள்ளது.