மதுரை மாநகரில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி தனது உரையைத் தொடங்கும் போதே வெற்றிவேல் வீரவேல் என முழக்கமிட்டுத் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

வழக்கமாகப் பிரதமர் தனது பொதுக்கூட்டங்களில் பாரத் மாதா கி ஜெய் என்று முழங்குவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார். ஆனால் இந்த முறை தமிழக மக்களின் உணர்வுகளோடும் கலாசாரத்தோடும் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் முருகப் பெருமானின் புகழ் பாடும் இந்த முழக்கத்தைக் கையில் எடுத்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றுவதற்கு முன்பாகத் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்குச் சென்று அவர் வழிபாடு நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபகாலமாகத் திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நிலவி வரும் சர்ச்சைகள் மற்றும் இந்து அமைப்புகளின் போராட்டங்களுக்கு இடையே பிரதமரின் இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பாரத் மாதா கி ஜெய் என்ற முழக்கம் தமிழக மக்களிடையே போதிய வரவேற்பைப் பெறாத சூழலில் வெற்றிவேல் வீரவேல் என்ற முழக்கம் பாசகவை மக்களிடம் எளிதாகக் கொண்டு சேர்க்கும் எனப் பிரதமர் நம்புவதாகக் கூறப்படுகிறது.

இந்து அமைப்புகளின் போராட்டங்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் மதுரையை உலுக்கி வரும் நிலையில் ஆன்மிகம் மற்றும் அரசியலை இணைக்கும் வகையில் அமைந்த பிரதமரின் இந்தப் புதிய அணுகுமுறை தேர்தல் களத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.