சாலையோரக் கடைகளில் விற்கப்படும் உணவுகளை உண்ணும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். அதற்கு வலுசேர்க்கும் விதமாக, மிக அசுத்தமான முறையில் ‘பிரெஞ்சு பிரைஸ்’ தயாரிக்கப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், நபர் ஒருவர் பிரெஞ்சு பிரைஸ் தயாரிப்பதற்காக வெட்டப்பட்ட உருளைக்கிழங்குகளை ஒரு பெரிய நீல நிற பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மசாலா கலந்து ஊறவைக்கிறார். டப்பா என்பது ஒருபுறம் இருக்கட்டும், அந்த டப்பாவின் உட்புறம் படிந்துள்ள அசுத்தமும், அவர் அதைக் கையாளும் விதமும் பார்ப்பதற்கே குமட்டலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இவ்வாறு அசுத்தமான சூழலில் ஊறவைக்கப்பட்ட உருளைக்கிழங்குகள், பின்னர் மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றப்பட்டு பொரிக்கத் தயாராக வைக்கப்படுகின்றன.

 

தொடக்கத்தில் பீட்சா மற்றும் பர்கர் கடைகளில் மட்டுமே கிடைத்து வந்த பிரெஞ்சு பிரைஸ், அதன் பிரபலம் காரணமாக இப்போது தெருவோரக் கடைகளிலும் தாராளமாகக் கிடைக்கிறது. ஆனால், அங்கு கடைபிடிக்கப்படும் சுகாதாரத் தரம் குறித்த கேள்விகள் இந்த வீடியோ மூலம் மீண்டும் எழுந்துள்ளன. இந்த வீடியோவைப் பார்த்த பல இணையவாசிகள், “வெளியில் விற்கும் உணவுகளை உண்ண வேண்டாம் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் ஏன் தடுக்கிறார்கள் என்பது இப்போது புரிகிறது” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இப்படியான அசுத்தமான முறையில் தயாரிக்கப்படும் உணவுகளை உண்பதால்: கடுமையான வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு. வாந்தி மற்றும் ஒவ்வாமை. டைபாய்டு போன்ற தொற்று நோய்கள் மற்றும் காய்ச்சல். போன்ற பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.