2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட விரும்பி ஆயிரக்கணக்கானோர் தங்களது விருப்ப மனுக்களைச் சமர்ப்பித்திருந்தனர். இந்நிலையில், கட்சித் தலைமை எடுத்துள்ள ஒரு புதிய முடிவு கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, விருப்ப மனு அளித்தவர்களுக்கு வழக்கமான நேர்காணல்கள் எதையும் நடத்தாமலேயே, முதற்கட்டமாக 80 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி வெளியிட விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

​மாவட்டச் செயலாளர்களிடம் பெறப்பட்ட ரகசிய ஆலோசனைகள் மற்றும் கருத்துகளின் அடிப்படையில் இந்த வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைக் கேள்விப்பட்ட விருப்ப மனு அளித்த நிர்வாகிகள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். நேர்காணல் மூலம் தங்களது திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த வேளையில், திடீரென பட்டியல் தயாராகி வருவதால் தலைமை மீது அவர்கள் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.