திருப்பதியில் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 3 வயது மகளைக் கழுத்தை நெரித்துக் கொன்று, காதலன் உதவியுடன் ரகசியமாகப் புதைத்த தாயின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதியைச் சேர்ந்த ஆஷா லதா என்பவருக்கு 3 வயதில் பெண் குழந்தை இருந்தது. கடந்த சில நாட்களாகக் குழந்தையைக் காணாததால் சந்தேகமடைந்த ஆஷா லதாவின் தாய் நாகரத்தினம்மா, தனது பேத்தி குறித்து விசாரித்துள்ளார். அதற்கு ஆஷா லதா முன்னுக்குப் பின் முரணான பதில்களைக் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் வலுக்கவே, நாகரத்தினம்மா இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீஸார் ஆஷா லதாவைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தனது குழந்தையைக் கொன்றதை ஒப்புக்கொண்டார். தனது கள்ளக்காதலுக்குக் குழந்தை தடையாக இருந்ததால், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு குழந்தையைக் கழுத்தை நெரித்துக் கொன்றதாகத் தெரிவித்தார்.

குழந்தைக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறி அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்த அவர், பின்னர் தனது காதலனை வரவழைத்துள்ளார். இருவரும் சேர்ந்து ஊருக்கு வெளியே யாருக்கும் தெரியாமல் ரகசியமாகச் சிறுமியின் உடலைப் புதைத்துள்ளனர்.

ஆஷா லதா அடையாளம் காட்டிய இடத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் சென்று, புதைக்கப்பட்ட சிறுமியின் உடலைத் தோண்டி எடுத்தனர். உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக ஆஷா லதா மற்றும் அவருக்கு உதவிய காதலன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற மகளையே தாய் கொன்று புதைத்த சம்பவம் திருப்பதி பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.