டெல்லியில், ஆண் குழந்தை இல்லாத ஆத்திரத்திலா அல்லது வேறு, தனது கர்ப்பிணி மனைவி மற்றும் மூன்று பிஞ்சு மகள்களைக் கழுத்தறுத்துக் கொலை செய்த நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முன்சுன் கேவட். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக டெல்லியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி அனிதா (27). இவர்களுக்கு 5, 4 மற்றும் 3 வயதில் மூன்று பெண் குழந்தைகள் இருந்தனர். தற்போது அனிதா மீண்டும் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

நேற்று காலை இவர்களது வீடு நீண்ட நேரமாகத் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அனிதா மற்றும் மூன்று பெண் குழந்தைகளும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், நான்கு பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், முன்சுன் கேவட் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு உணவில் போதை மருந்து கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளார். அவர்கள் சுயநினைவற்ற நிலையில் இருந்தபோது, கத்தியால் கழுத்தை அறுத்து மிகக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியது தெரியவந்துள்ளது.

இந்தக் கொடூரக் கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்ற ஆத்திரத்தில் இந்தக் கொலையைச் செய்தாரா? அல்லது திருமணத்தை மீறிய உறவு ஏதேனும் காரணமா? இல்லையெனில் வேறு ஏதேனும் காரணமா என்ற ரீதியில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் தப்பியோடிய முன்சுன் கேவட்டைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தலைநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.