அதிமுகவில் இருந்து என்னை நீக்கியதற்கான காரணத்தை தற்போதைய தலைமை விளக்க வேண்டும்; என் மீது தவறு இருந்தால் அரசியலை விட்டே விலகத் தயார்,” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போடியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஆவேசமாகத் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளை நினைவுகூர்ந்தார்:
“மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே அர்ப்பணித்தவர். மத்திய அரசின் நிதியை எதிர்பார்க்காமல், மாநில அரசின் சொந்த நிதியைக் கொண்டே கல்வி மற்றும் மகளிருக்கான உன்னதத் திட்டங்களைச் செயல்படுத்தினார். இதனால்தான் அவர் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
கட்சியில் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகள் குறித்து அவர் கூறியதாவது, 2001-இல் கட்சிக்கு சோதனை ஏற்பட்டபோது அம்மா என்னை முதல்வராகத் தேர்ந்தெடுத்தார். அவரது வழியில் ஆறு மாத காலம் நேர்மையாகச் செயல்பட்டேன். பின்னர் அவர் போட்டியிடுவதற்காகப் பதவியைத் துறந்தேன். அதேபோல் 2011-லும் எனக்கு விருப்பம் இல்லை என்று கூறியும், அம்மாவின் கட்டளைக்கு இணங்கவே முதல்வர் பொறுப்பை ஏற்றேன். விசுவாசமாக இருந்த என்னை நீக்கியதற்கான காரணத்தை தற்போதைய பொறுப்பில் உள்ளவர்கள் (இபிஎஸ் தரப்பு) விளக்க வேண்டும்,” என்றார்.
தனிக்கட்சி தொடங்குவது குறித்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அவர், “ஓராண்டுக்கு முன்பே பண்ருட்டி ராமச்சந்திரன் என்னிடம் தனிக்கட்சி தொடங்குமாறு அறிவுறுத்தினார். ஆனால், எனக்கு அதில் உடன்பாடு இல்லை. இப்போது மட்டுமல்ல, எப்போதுமே நான் தனிக்கட்சி தொடங்க மாட்டேன். அதிமுக-வில் நான் செய்த தவறு என்ன என்பதை நிரூபித்தால், இப்போதே அரசியலை விட்டு விலகத் தயார்.
மேலும் அதிமுக இணைப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ஒன்றுபட்டால் மட்டுமே அதிமுக-வுக்கு வெற்றி என்பதை நான் ஏற்கவில்லை,” எனத் தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
