அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹10,000 வழங்கப்படும் என்ற எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பை திமுக கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து பேசிய திமுகவின் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், தோல்வி பயத்தின் காரணமாகவே இவ்வளவு பெரிய தொகையை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கடந்த காலங்களில் தான் செய்த தவறுகளுக்கும் பாவங்களுக்கும் பரிகாரமாகவே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கலாம் என்றும் சாடியுள்ளார்.

​தமிழகத்திற்கு வரவேண்டிய வருமான உரிமைகளை எல்லாம் ஒன்றிய அரசிடம் ஒப்படைத்துவிட்டு, இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பணம் தருவோம் என்று கூறுவது மக்களை ஏமாற்றும் செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார். இப்போதாவது புண்ணியம் தேடலாம் என இபிஎஸ் நினைக்கிறார், ஆனால் மக்கள் இந்த “பாவமன்னிப்பு” போன்ற வாக்குறுதியை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.