வேலூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு அனுமதி வழங்குவதில் காவல்துறை காலதாமதம் செய்வதாக எழுந்த புகார்களுக்கு வேலூர் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஜனவரி 30-ஆம் தேதியே சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி, நிகழ்ச்சி குறித்த அடிப்படைத் தகவல்களைக் கேட்டு தவெக நிர்வாகிகளுக்குக் காவல்துறையினர் கேள்வியுரை வழங்கியுள்ளனர்.
ஆனால், பிப்ரவரி 5-ஆம் தேதி தவெக தரப்பிலிருந்தே “தவிர்க்க முடியாத காரணங்களால் தேதி தள்ளிப்போகிறது, மாற்றுத் தேதியை தலைமையிடம் கேட்டு மீண்டும் விண்ணப்பிக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டதாகவும், அதன் பின்னரே புதிய விண்ணப்பத்தின் அடிப்படையில் நான்கு நாட்களுக்குள் உரிய நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் நேற்று பிப்ரவரி 23, வேலூர் அகரம்சேரி பகுதியில் நடைபெற்ற இந்த மாபெரும் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்திற்கு சுமார் 900 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வெயில் மற்றும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, 4,900 நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருந்ததுடன், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் 20-க்கும் மேற்பட்ட கடுமையான நிபந்தனைகளை காவல்துறை விதித்திருந்தது. கடந்த முறை சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், இந்த முறை நவீன ஏர்-கூலர்கள் மற்றும் 33 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட பந்தல் எனப் பாதுகாப்பு ஏற்பாடுகளை தவெக தலைமை தீவிரப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
