தேர்தல் நெருங்கும் வேளையில், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு உங்களை அழைத்தால் மீண்டும் அந்த அணியில் இணைவீர்களா? என்ற கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் மிகத் தெளிவான ஒரு பதிலை அளித்துள்ளார். “மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்” என்று ஔவையார் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தங்களை மதிக்காத இடத்திற்குச் செல்லும் எண்ணம் தமக்கு துளியும் இல்லை என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
இதன் மூலம் அதிமுகவின் தற்போதைய தலைமையுடன் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். தன்னை அவமானப்படுத்தியவர்களுடன் கைக்கோர்ப்பதை விட, தனது தன்மானமே முக்கியம் என ஓபிஎஸ் கருதுவதாகத் தெரிகிறது. இந்த “ஔவையார் மேற்கோள்” அரசியல் வட்டாரத்தில் இப்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
