ஒடிசா மாநிலம் கேந்திரப்பாரா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆங்கில வழிப் பள்ளியில், 7-ஆம் வகுப்பு படித்து வந்த 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தப் பள்ளியில் பணியாற்றும் நான்கு ஆசிரியர்கள் மற்றும் ஒரு உதவியாளர் (பியூன்) சேர்ந்து அந்தச் சிறுமியைப் பள்ளி வளாகத்திலேயே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.
இதில் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், மினாடி பாய் என்ற பெண் ஆசிரியையும் இந்த அநாகரீகச் செயலுக்கு உடந்தையாக இருந்துள்ளார். வெளிமாநிலத்தில் வேலை பார்க்கும் தந்தையைப் பிரிந்து தாயின் பராமரிப்பில் வளர்ந்து வந்த அந்தச் சிறுமி, கடந்த ஜனவரி மாதம் முதல் பள்ளிக்குச் செல்ல மறுத்து மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டார்.
சிறுமியின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு சந்தேகமடைந்த தாய், அவரிடம் கனிவாக விசாரித்தபோதுதான் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பள்ளியில் அரங்கேறிய இந்த அநீதி வெளிச்சத்திற்கு வந்தது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நான்கு ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர் என 5 பேர் மீதும் போக்சோ (POCSO) உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
கல்வி புகட்ட வேண்டிய ஆசிரியர்களே பாதுகாப்பற்ற முறையில் நடந்துகொண்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
