தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெறவுள்ளது. நீண்ட நாட்களாகப் பேசப்பட்டு வந்த இவர்களது காதல் விவகாரம், தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் உறுதியாகியுள்ளது.

தங்கள் திருமணத்திற்கு ரசிகர்களின் விருப்பப்படி ‘தி வெடிங் ஆப் விரோஷ்’ (The Wedding of ViRosh) என்று பெயரிட்டுள்ளனர். இது குறித்து ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்ச்சிப்பூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நாங்கள் எதையும் திட்டமிடுவதற்கு முன்பே, ரசிகர்கள் எங்களுக்கு ‘விரோஷ்’ என்று பெயரிட்டு அன்பு காட்டினீர்கள். எனவே உங்கள் நினைவாகவே எங்கள் திருமணத்திற்கு இந்தப் பெயரைச் சூட்டுகிறோம்,” எனத் தெரிவித்துள்ளார்.

அவர்களது திருமணம் பிப்ரவரி 26, உதய்பூர் (ராஜஸ்தான்)-ல் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்தத் திருமணத்தில் திரையுலகப் பிரபலங்கள் யாரையும் அழைக்காமல், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் மட்டும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

திருமணத்திற்குப் பிறகு ஒரு மாதம் வரை சினிமா மற்றும் சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருக்க இந்த ஜோடி முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் மார்ச் 4-ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் இந்தியத் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்தபோது இவர்களிடையே காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. பல்வேறு கிசுகிசுக்களுக்கு மத்தியில், தற்போது இந்த ஜோடி தங்களது வாழ்வின் அடுத்த கட்டத்திற்குச் செல்லத் தயாராகிவிட்டது. முன்னதாக, கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டியுடன் ராஷ்மிகாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று, பின்னர் அது ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது ‘விரோஷ்’ திருமணச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.