சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சித் தலைவர் காதர் மொகிதீன் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்காக அறிவாலயம் வந்திருந்த அவர், ஆலோசனை முடிந்து வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஊடகங்களுக்குப் பேட்டியளித்துக் கொண்டிருந்த போதே எதிர்பாராத விதமாக அவர் நிலைகுலைந்து மயங்கி சரிந்தார்.

 

உடனடியாக அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் உதவியாளர்கள் அவரைத் தாங்கிப் பிடித்து, அருகே உள்ள அறைக்குத் தூக்கிச் சென்றனர். தற்போது ரம்ஜான் நோன்பு காலம் என்பதாலும், சென்னையில் நிலவும் கடும் வெயில் காரணமாகவும் ஏற்பட்ட உடல் சோர்வினால் அவர் மயக்கமடைந்ததாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிது நேர ஓய்விற்குப் பிறகு அவர் உடல்நிலை சீரடைந்ததையடுத்து அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தால் அண்ணா அறிவாலய வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.